கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஆக.19ல் போராட்டம் - மாநில காங்கிரஸ் அறிவிப்பு..
கர்நாடக ஆளுநருக்கு எதிராக வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம்(மூடா) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தியிருந்தது. அதற்கு பதிலாக மாற்று நிலம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 3 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் இன்று காலை ஒப்பதல் வழங்கி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து காங்கிரஸ் அரசு சார்பில் இன்று மாலை முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தத்தினர். கூட்டத்தில் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு வந்துள்ளார். மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் உடனடியாக பெங்களூரு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி. கே. சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முதல்வர் சித்தராமையா தலைமையில் முக்கிய அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் அனுமதி வழங்கி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற 19ம் தேதி ( நாளை மறுநாள்) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.