கர்நாடக ஆட்சியில் 5 வருடத்தை இரண்டாக பிரிக்க ஒப்பந்தம்? - டி.கே.சிவகுமாரின் சகோதரர் பரபரப்பு பேட்டி

 
DK Sivakumar

கர்நாடக முதலமைச்சர் தொடர்பான காங்கிரஸ் தலைமையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா,  அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக டெல்லியில் மூத்த அரசியல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்துள்ளார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில். காங்கிரஸ் தலைமையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகா மற்றும் கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய சகோதரர் முதலமைச்சர் ஆக விரும்பினார். ஆனால் அவர் ஆகவில்லை. இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. என்ன ஒப்பந்தம் முன்மொழியப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 5 வருடத்தை இரண்டாகப் பிரிக்கும் ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாக கேள்விப்படுகிறேன்.  இவ்வாறு கூறினார்.