முதலமைச்சருக்கான போட்டியில் சித்தராமையாவுடன் மோதலா?- டி.கே.சிவகுமார் பேட்டி

 
DK Sivakumar

கர்நாடக முதலமைச்சாருக்கான போட்டியில் சித்தராமையாவுடன் மோதல் போக்கு நீடிப்பதாக வெளியாகும் செய்தி உண்மையில்லை என டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். 
 
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று நடைபெற்றது.  அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில், டி.கே. சிவக்குமார் தும்கூரு நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: எனக்கு சித்தராமையாவுடன் கருத்து வேற்றுமைகள் உள்ளன என சிலர் கூறி வருகின்றனர். எங்களுக்குள் எந்தவித வேற்றுமைகளும் கிடையாது. கட்சிக்காக பலமுறை நான் தியாகம் செய்திருக்கிறேன். கடந்த காலத்தில், தியாகம் செய்து, உதவி செய்து, சித்தராமையாவுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன். தொடக்கத்தில் என்னை மந்திரியாக ஆக்காதபோது நான் பொறுமையாக இருக்கவில்லையா? சித்தராமையாவுக்கு நான் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.