பா.ஜ.க.வுக்கு 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது எங்களுக்கு தெரியும்.. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

 
டி.கே.சிவகுமார்

பா.ஜ.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது எங்களுக்கு  தெரியும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

அண்மையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதல்வருமான பசவராஜ் பொம்மை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது, அது வேலை செய்யாது என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

பசவராஜ் பொம்மை

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எங்கள் எண்களை நாங்கள் நம்புகிறோம். பா.ஜ.க.வுக்கு 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது எங்களுக்கு (காங்கிரஸ்)  தெரியும். எனது தகவலின்படி, அவர்கள் (பா.ஜ.க.) 40 இடங்களுக்குள் வருவார்கள். முன்பு பி.எஸ். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவர்களுக்கு 40 இடங்கள் கிடைத்தது. விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் இந்த நேரத்தில் பா.ஜ.க. 65 இடங்களுக்கு மேல் பெறமாட்டார்கள் என்று இதை சொல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பா.ஜ.க.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.