கர்நாடக தேர்தலில் தனியாக போட்டியிடுவோம், தனியாக ஆட்சி அமைப்போம்.. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்

 
டி.கே.சிவகுமார்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிடுவோம், தனியாக ஆட்சி அமைப்போம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே மாதத்தில்  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளை செய்து வருகின்றன. கர்நாடக மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை கட்சிகள் அளித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்   என்ற வாக்குறுதிகள் அம்மாநில தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸின் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் தனியாக செல்கிறோம். நாங்கள் தனியாக போட்டியிடுகிறோம். நாங்கள் தனியாக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால், எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தராமையா
இந்நிலையில், டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையா, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக சித்தராமையாக கூறுகையில்,  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டது. 125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது, மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம் என்று சித்தராமையா தெரிவித்தார்.