கர்நாடக அமைச்சரவையின் முதற்கட்ட பட்டியல் வெளியானது!

கர்நாடக அமைச்சரவையில் இடம் பெற உள்ள 8 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை தற்போது வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த சூழலில் கட்சியின் சார்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக கட்சியின் மாநில தலைவர் டி .கே. சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கிறார் . அத்துடன் துணை முதல்வராக டி.கே. சிவகுமார் பதவி ஏற்க உள்ள நிலையில் இருவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் கர்நாடகா முதல்வர் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 8 பேர் கொண்ட முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். அத்துடன் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்