தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை - பசவராஜ் பொம்மை பேட்டி

 
Basavaraj

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை என அம்மாநில தற்காலிக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அடுத்த அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்துள்ளார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை கூறியதாவது: ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.