அமலாக்கத்துறை சம்மன்.. முதல்வர் சந்திரசேகர் ராவ், பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிரான மத்திய அரசின் மிரட்டல் தந்திரங்கள்..கவிதா

 
கவிதா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது, முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிரான மிரட்டல் தந்திரங்கள் என்று கே.கவிதா குற்றம் சாட்டினார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 9ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கவிதா கூறுகையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிரான மிரட்டல் தந்திரங்கள் என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை

தெலங்கானாவின் சட்டமேலவை உறுப்பினர் கே.கவிதா டிவிட்டரில், எங்கள் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் போராட்டத்திற்கும் குரலுக்கும், பி.ஆர்.எஸ். கட்சிக்கும் எதிரான இந்த மிரட்டல் உத்திகள் நம்மை தடுக்காது என்பதை மத்தியில் ஆளும் கட்சி அறிய விரும்புகிறேன். கே.சந்திரசேகர் ராவின் தலைமையில்  உங்கள் தோல்விகளை அம்பலப்படுத்தவும், இந்தியாவின் ஒளிமயமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக குரல் எழுப்பவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

கே.சந்திரசேகர் ராவ்

ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், விசாரணை நிறுவனங்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இருப்பினும் தர்ணா மற்றும் அன்றைய தினத்தில் ஏற்கனவே கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக  நான் அதில் கலந்து கொள்ளும் தேதியில் சட்டப்பூர்வ கருத்துக்களை பெறுவேன். அடக்குமுறை மக்கள் விரோத ஆட்சிக்கு தெலங்கானா ஒருபோதும் அடிபணியாது என்பதை டெல்லியில் உள்ள அதிகார வெறியர்களுக்கு நினைவூட்டுகிறேன். மக்களின் உரிமைகளுக்காக அச்சமின்றி கடுமையாக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.