எங்கு தேர்தல் நடந்தாலும் மோடிக்கு முன்பாக அமலாக்கத்துறை வந்துவிடும்.. தெலங்கானா முதல்வரின் மகள் தாக்கு

 
kavitha -  கவிதா

எங்கு தேர்தல் நடந்தாலும் மோடிக்கு முன்பாக அமலாக்கத்துறை வந்துவிடும் என்று தெலங்கானா முதல்வரின் மகளும், அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா விமர்சனம் செய்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து கவிதா விசாரணை ஆஜராக காலஅவகாசம் கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை மார்ச் 11ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி புதிய சம்மன் அனுப்பியது. இதற்கிடையே நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தக்கோரி இன்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரத  போராட்டத்தை கே.கவிதா நடத்த உள்ளார். இதற்காக நேற்று டெல்லி சென்றார். 

அமலாக்கத்துறை

டெல்லியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: எங்கு தேர்தல் நடந்தாலும் மோடிக்கு முன்பாக அமலாக்கத்துறை வந்துவிடும் என்பதை உறுதிப்படுத்துவது விசாரணை அமைப்புகளின் இயல்பு. தெலங்கானா சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை அனுப்பி வருகிறது. சுமார் 15 முதல் 16 பி.ஆர்.எஸ். அமைச்சர்கள்வெவ்வேறு வழக்குகளில் குறிவைக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடி

தெலங்கானா மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தான் என்ன செய்துள்ளார் என்பதை பொதுமக்களிடம் தெரிவிக்குமாறு மோடி ஜியை கேட்டுக் கொள்கிறேன். மக்களின் இதயங்களை வென்று பின்னர் தேர்தலில் வெற்றி பெறுங்கள். பா.ஜ.க. ஒன்பது மாநிலங்களில் பின்கதவு வழியை பயன்படுத்தி அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் தெலங்கானாவில் அதை செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் எங்களை பயமுறுத்த முயன்றனர், ஆனால் நாங்கள் பயப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை அவர்களிடம் கூற விரும்புகிறோம். போராட்டம் நடத்தி மக்களின் ஆசீர்வாதத்தை பெற்ற பிறகு தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சிக்கு வந்ததால்தான் ஆட்சி நடக்கிறது. 

பா.ஜ.க.

பா.ஜ.க.வின் தோல்விகளை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். மார்ச் 11ம் தேதி எனது வீட்டுக்கு வருமாறும்,  அவர்கள் யாருடன் விசாரணை செய்ய விரும்புகிறாரோ அவர் முன்னிலையில் விசாரிக்குமாறும்  அமலாக்கத்துறையை கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு அமலாக்கத்துறை மறுத்து விட்டது. நான் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று தர்ணாவை ரத்து செய்திருக்கலாம், ஆனால் அவர்களின் தந்திரங்களுக்கு நாங்கள் பயப்படவில்லை என்று நான் ஒரு செய்தியை அனுப்ப வேண்டியிருந்தது. அமலாக்கத்துறை என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பேன். பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் அதை ஆன்லைனை் முறையில் நடத்த வேண்டும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.