குஜராத் மாடல் போலியானது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வீழ்த்தி விட்டார்... தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ்

 
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

குஜராத் மாதிரி (வளர்ச்சிக்கான) போலியானது என்றும்பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வீழ்த்தி விட்டார் என்றும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பி.ஆர்.எஸ். கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அந்த கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் உரையாற்றினார். அப்போது கே.சந்திரசேகர் ராவ் கூறியதாவது: பொதுமக்களின் மனநிலை பி.ஆர்.எஸ். கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சில கருத்துக்கணிப்புகளில் தெரிகிறது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 95 முதல் 105 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். நிச்சயம் வெற்றி பெறும். 

பாரத் ராஷ்டிர சமிதி

2014 முதல் (தெலங்கானா மாநிலம் உருவான பிறகு பி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வந்ததும்) மாநிலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதால்,தெலங்கானா மாதிரி வளர்ச்சியை நாடு விரும்புகிறது. குஜராத் மாதிரி (வளர்ச்சிக்கான) போலியானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வீழ்த்தி விட்டார். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், தெலங்கானா மாதிரி நாட்டுக்கு தவிர்க்க முடியாதது என்று இப்போது சுட்டிக்காட்டுகிறார்கள். சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

மோடி

பி.ஆர்.எஸ். அனைத்து பிரிவினரையும் சமமாக நடத்துகிறது. இதுவே பி.ஆர்.எஸ். வெற்றியின் ரகசியம். அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர அற்ப விஷயங்களில் அல்ல. ஜூன் 2 முதல் 21 நாட்களுக்கு தெலங்கானா உருவாக்க நாள் கொண்டாட்டங்கள் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த வேண்டும். பி.ஆர்.எஸ். ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.