#JUSTIN : லேட்டரல் என்ட்ரி நியமன முறை ரத்து.. யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு கடிதம்..
மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிக்கும் லேட்டரல் என்ட்ரி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அத்துடன் இந்த நியமன முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்றும், அப்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படுமே ஆனால் 23 பணியிடங்கள் ஓ.பி.சி, பி.சி வகுப்பினர் மட்டுமே பணியமர்த்தப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் யுபிஎஸ்சி தேர்ச்சி பெறாதவர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படலாம் என்பதாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாநில அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் என யார் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதாலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வந்தன. இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என பாஜக கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்தவகையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதலென்றும், மேலும் இது தகுதிவாய்ந்த SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் மேல்நிலையில் தகுதியான வாய்ப்புகளைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் மத்திய அரசு இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும், ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், மேலும் நியாயமான மற்றும் சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழவே, மத்திய அரசு லேட்டரல் என்ட்ரி முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமன நடைமுறையை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு மத்திய ஜிதேந்தர் சிங் கடிதம் எழுதி இருக்கிறார். பிரதமரின் அறிவுறுத்தலின் படி, கடந்த 3 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை திரும்பப்பெறுமாறு யுபிஎஸ்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.