சந்திரபாபுவை சிறையில் அடைக்காமல் வீட்டு காவலில் வைக்க நீதிபதி மறுப்பு

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை சிறையில் அடைக்காமல் வீட்டு காவலில் வைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி நேற்று அதிகாலை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சந்திரபாபுவை சிறையில் அடைக்காமல் வீட்டு காவலில் வைக்க வைப்பது குறித்தும், சிறையில் வைத்தால் அவருக்கு உண்டான வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு தரப்பில் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மனு மீதான வாதங்கள் நீதிபதி அறையில் நடைபெற்ற நிலையில்,சந்திரபாபுவின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும்படி அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால் வீட்டுக் காவலை எதிர்த்த சிஐடியின் வழக்கறிஞர்கள் சிறப்பு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து தர சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததால், சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு போலீசார் கொண்டுசென்றனர்.
45 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட சந்திரபாபு நாயுடு, 14 ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். அவருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் சந்திரபாபு நாயுடு முதன்முறையாக சிறைக்கு செல்கிறார்.