"டெல்லி போராட்டத்தை அரசியலாக்காதீர்... பேச்சுவார்த்தை நடத்த தயார்- ஜே.பி.நட்டா
டெல்லி போராட்டத்தை அரசியலாக்காதீர். பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம். போராட்டத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து மத்திய அரசு ஒதுங்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் தெலங்கானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில்தான் வினாத்தாள்கள் கசிந்தன. போராட்டத்துக்கும் காங்கிரஸின் ராகுல்காந்திக்கும் என்ன தொடர்பு? மாணவர்களுக்கு நீதி வழங்குவதாக கூறுவதை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும். ராகுல்காந்தி நடத்திய போராட்ட ஷோ மாணவர்களுக்கு உதவுவதற்கா என தெரியவில்லை. வினாத்தாள் கசிவு பிரச்சனையை சீரியசான பிரச்சனையாகவே மத்திய அரசு பார்க்கிறது.
நாட்டின் எதிர்காலமும், மாணவர்களின் நலனும் முக்கியம் என்பதால் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதைவிட நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதே சிறந்தது. எதிர்க்கட்சிகள் எத்தனை மணி நேரம் விவாதம் கோரினாலும் அரசு தயாராக உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவை. வினாத்தாள் கசிவுகள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் புகார்களுக்கு, மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும். பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் பொறுப்பான அரசு. நாடாளுமன்றத்தில் அனைத்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்க தயார். நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயார். ஆனால் இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது முறையல்ல” என்றார்.

