கர்நாடக தேர்தல் மாநிலத்தில் காங்கிரஸின் ஊழல் மற்றும் பா.ஜ.க.வின் வளர்ச்சியை பற்றியதாக இருக்கும்... ஜே.பி. நட்டா

 
ஜே.பி.நட்டா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மாநிலத்தில் காங்கிரஸின் ஊழல் மற்றும் பா.ஜ.க.வின் வளர்ச்சி பணிகளை பற்றியதாக இருக்கும் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் திப்தூரில் பா.ஜ.க.வின் விஜய் சங்கல்ப யாத்திரை அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார்.  மேலும், திப்தூரில் நடைபெற்ற 2.5 கிலோ மீட்டர் சாலை பேரணிக்கு ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார். இந்த பேரணியில் கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ்

அந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மாநிலத்தில் காங்கிரஸின் ஊழல், கமிஷன் மற்றும் பா.ஜ.க.வின் வளர்ச்சி பணிகளை பற்றியதாக இருக்கும்.  மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவான அலை உள்ளது. நான் சென்ற ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க. மீது மக்கள் ஆர்வத்துடன் இருப்பது தெரிந்தது. பிரதமர் மோடி அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை விரிவாக மேற்கொண்டுள்ளார். அதை எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரித்து செயல்படுத்தினர். 

பா.ஜ.க.

இங்கிலாந்தில் இந்தியாவின் ஜனநாயகத்தை பற்றி தவறாக பேசியதற்காக வயநாடு எம்.பி.க்கு (ராகுல் காந்தி) பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகாவில்  224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.