இன்ஸ்டாகிராமில் வேறு ஆணுடன் பேசிய காதலியை அடித்து கொன்ற காதலன்

 
insta

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் வேறு ஆணுடன் பேசிய காதலியை அடித்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார். கோடா மாவட்டத்தில் உள்ள உர்ஜாநகரில் மார்ச் 8 புதன்கிழமை இந்த கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மகாகம காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சிறுமி(17) மார்ச் 8 ஆம் தேதி, ஹோலி அன்று முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. ஹோலி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வராதபோது, ​​​​அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை, கோவித்பூர் கிராமத்தில் வயலில் சிறுமியின் சடலம் கிடப்பதைக் கண்டு சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அச்சிறுமியின் காதலனை பிடித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஊர்ஜாநகரில் உள்ள  தனியார் பள்ளியில் படிப்பதும், இருவரும் காதலித்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிறுமி வேறொரு பையனுடன் பேசுவதை அறிந்ததும் ஆத்திரத்தில், அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றத்தை சிறுவன் ஒப்புக்கொண்டதை அடுத்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கம்பி, சிறுமியின் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்ககா அனுப்பிவைத்தனர். அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.