ஐடி ஊழியர்களுக்கு தினமும் 14 மணி நேரம் வேலை.. கர்நாடகாவில் பரபரப்பு..

ஐடி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என நிறுவனங்கள் கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்துள்ளன.
கர்நாடக தலைநகராக பெங்களூரு ‘இந்தியாவின் சிலிக்கான் வேலி’ என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அங்குதான் இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ, ஆக்சென்ச்சர், டிசிஎஸ் உள்பட ஏராளாமான நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. படித்து முடித்து வேலைக்கு முயற்சிக்கும் இளைஞர்கள் பலரும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் செட்டில் ஆக வேண்டும் என விரும்புவது உண்டு.. அந்த அளவிற்கு பெங்களூரு ஹாட் சிட்டியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தினசரி வேலை நேரத்தை 12லிருந்து 14 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் சார்பில் அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் 14 மணிநேர பணி நேரத்தை அமல்படுத்தும் வகையில் கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் படி 12 + 2 என்ற 14 மணிநேர பணி நேரம் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களில் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கும் பட்சத்தில் ஐடி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகும். இது மன அழுத்தம் உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் இந்த பரிந்துரையை ஏற்கக்கூடாது எனவும் ஐடி ஊடியர்க்ள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.