மோடி அமைச்சரவையில் அநீதி- ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி

 
ஷிண்டோ

7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனா கட்சிக்கு ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியதுடன், 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அஜித்பவாரின் தேசியவாத் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. 7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனா கட்சிக்கு ஒரு இணையமைச்சர் பதவி வழங்கிவிட்டு, 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு 1 இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் எம்பி ஸ்ரீரங் பார்னே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வெறும் 2 எம்.பி.க்களை வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.