காது குத்துவதற்காக மயக்க ஊசி - 6 மாத குழந்தை மரணம்

கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில், 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமராஜநகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஹங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியினர் தங்கள் மகனை காது குத்துவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பணியில் இருந்த பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் நாகராஜூ, ரூ.200 பெற்றுக்கொண்டு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியை போட்டதால் குழந்தை மயக்கமடைந்தது.
குழந்தையை பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் அறிவித்தனர். மயக்க ஊசி செலுத்திய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.