DJ சத்தத்தால் பறிபோன 20 நாள் பச்சிளம் குழந்தையின் உயிர்!
உத்தரப் பிரதேசத்தில், சிலை கரைப்பு ஊர்வலத்தில் ஒலித்த அதீத டிஜே சத்தத்தால் 20 நாள் பெண் குழந்தை உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது டிஜே வாகனத்தில் இருந்து ஒலித்த அதீத சத்தத்தால் 20 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் முன்பு அதிக சத்தத்தில் இசை ஒலித்தபோது, குழந்தை பயத்தில் தொடர்ந்து அழுது கதறியதாகவும், பின் அசைவின்றி கிடந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின்பேரில், DJ கருவிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜே ஆபரேட்டர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து ஒலித்ததால், குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக அக்குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் உயிரிழப்புக்கான காரணம் உறுதியாகாததால், உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

