ஆண்டு வாரியாக தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம்!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுவாரியாக தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக ஒன்றிய பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் 12 லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.
இந்த நிலையில், ஆண்டுவாரியாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் வருமாறு: 2005ம் ஆண்டு ஒரு லட்சமாக தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், இது 2012ம் ஆண்டு 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தனிநபர் வருமான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதேபோல் கடந்த 2023ம் ஆண்டு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.