“35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்கிறேன்.. எனக்காக இதுதான் முதல்முறை” - பிரியங்கா காந்தி..
தேர்தலில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் ‘உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என வயநாட்டில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிரும் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ரோடுஷோ நடத்திய ராகுல் மற்றும் பிரியங்கா காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினர். அப்போது கல்பெட்டாவில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது, “என்னுடைய 17 வது வயதில் முதல் முறையாக என்னுடைய தந்தை ராஜீவ் காந்தியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்முறையாக 1989 ஆம் ஆண்டு கலந்து கொண்டேன். கடந்த 35 ஆண்டுகளாக என் அப்பா, அம்மா, சகோதரர் மற்றும் அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பலமுறை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.
பல தேர்தல்களில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு நபர்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும், முதல் முறையாக என்னுடைய தேர்தல் எனக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது. இந்த வாய்ப்பை தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஒரு வாய்ப்பை தந்தால் எனக்குத் தந்த ஆதரவாக நான் நினைப்பேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயநாடு சூரல்மலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை என் சகோதரனோடு வந்து பார்த்தேன். பலரையும் இழந்து வாடிய மக்களை பார்த்தேன். உறவுகளையும், உடமைகளையும் இழந்த மக்களை பார்த்தேன்; இவ்வளவு பெரிய பாதிப்பை இங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்தார்கள். வயநாடு மக்களின் இந்த தைரியம் என்னுடைய மனதில் மிகப் பெரிய அளவில் பதிந்துள்ளது. வயநாடு மக்களின் குடும்பத்தில் ஒருவராக மாறுவது பாக்கியமாக கருதுகிறேன்.
நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால், வயநாடு பகுதி மக்கள் சந்திக்கும் வனவிலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். மற்றும் இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன். இது குறித்து என்னுடைய சகோதரர் என்னிடத்தில் விரிவாக பேசியுள்ளார். இந்த பயணத்தில் என்னுடைய வழிகாட்டிகளாக வயநாடு பகுதி மக்கள் உள்ளீர்கள். உங்களுக்காக போராட நான் உள்ளேன். என்னை வேட்பாளராக அங்கீகரித்த உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.