“பாஜக ஜெயித்தால் எங்கள் வீடுகளை எரித்து விடுவார்கள்”- அச்சத்தில் மக்கள்

 
 “பாஜக ஜெயித்தால் எங்கள் வீடுகளை எரித்து விடுவார்கள்”- அச்சத்தில் மக்கள்

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்கத்தின் ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்புவாசிகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக கொடிகளை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென சாலையை மறித்தனர். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால் வீடுகளை எரித்து விடுவோம் எனவும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை மிரட்டி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் நெருங்கிய கூட்டாளியான உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் இஸ்ராஃபில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.