பாஜகவில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.5 கோடி சுருட்டிய பெண் சாமியார்

பெங்களூருரைச் சேர்ந்த தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி என்பவரிடம் தேர்தலில் போட்டியிட்டு உடுப்பி மாவட்டம், பைந்தூர் சட்டமன்ற தொகுதியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சைத்ரா குந்தாபூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மோசடியில் ஈடுபட்ட ககன் கடூர், ஸ்ரீகாந்த் நாயக் மற்றும் பிரசாத் பைந்தூர் கைதாகி உள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அபினவ் ஹள ஸ்ரீ சுவாமி உள்பட மூன்று பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்பொழுது கைதாகி உள்ள மூன்று நபர்களையும் 10 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் நேற்று சைத்ரா குந்தாபூருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது இதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொழிலதிபர் தான் வழங்கிய பணத்தை திருப்பித் தர வேண்டும் என அவரது அலுவலகத்தில் வைத்து சைத்ரா மற்றும் ககன் கடூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பணத்தை திருப்பித் தராவிட்டால் தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென ககன் கடூர் தன் பையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டில் ஒன்றை எடுத்து அதை குடிப்பது போல் நாடகம் நடத்தியுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சியை தற்பொழுது தொழிலதிபர் காவல் துறையிடம் வழங்கி உள்ளார். சாலை ஓரத்தில் கபாப் கடை நடத்தி வந்த நபரை அழைத்து வந்து ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியாக நடிக்க வைத்து தன்னை ஏமாற்றி இருப்பதை அறிந்த தொழிலதிபர் பலமுறை பணத்தை திருப்பி கேட்ட போது, ஒவ்வொரு முறையும் சைத்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் தற்கொலை செய்வது கொள்வது போல நாடகம் நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவிந்த்பாபு போல மேலும் பலரிடம் இந்த கும்பல் ஏமாற்றி உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.