கொட்டித்தீர்த்த கனமழை- வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக யலஹங்கா, ராஜராஜேஸ்வரி நகர், விஜய நகர், மல்லேஸ்வரம், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் சுமந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். திடீரென கனமழை கொட்டித் தீர்த்ததை அடுத்து மாநகராட்சியின் வார் ரூமில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அங்கு உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள நீர் புகுந்த வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.