200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தலைகீழாகச் சிக்கியிருந்த 3 வயது சிறுமி- அதிரவைக்கும் சம்பவம்

 
200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தலைகீழாகச் சிக்கியிருந்த 3 வயது சிறுமி- அதிரவைக்கும் சம்பவம்

ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

பிரதிநிதித்துவப் படம்.

ஃபரிதாபாத்தின் சீஹி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது 250 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமி, 10 மணிநேர போராட்டத்திற்கு பின் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டார். அந்தச் சிறுமி, ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பல ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாத அந்த ஆழ்துளைக் கிணற்றில் 125 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால், மீட்புப் பணிக்கு அது பெரும் தடையாக இருந்தது. அந்தக் குழந்தை சுமார் 200 அடி ஆழத்தில் தலைகீழாகச் சிக்கியிருந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) துணைத் தளபதி குணால் திவாரி கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 7.45 மணிக்குக் கிடைத்தது. இரவு 9.05 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த எங்கள் குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, ஹரியானா மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில காவல்துறை, மாநில தீயணைப்புத் துறை, உத்தரப் பிரதேச குடிமைப் பாதுகாப்புப் படை (காசியாபாத்), மருத்துவத் துறை மற்றும் மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து அதிகாலை 3.50 மணிக்கு நாங்கள் அந்தச் சிறுமியை வெற்றிகரமாக மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம், இருப்பினும் அவர் உயிரிழந்தார்” என்றார்.