10 நாட்களுக்கு பின் காற்றில் கரைந்தார் ஹரிஷ் ராணா!
கடந்த 13 ஆண்டுகளாக 'கோமா' எனப்படும் நினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 32 வயது இளைஞர் உயிரிழந்தார்.

ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ஆம் ஆண்டு சண்டிகரில் பி.டெக். படித்துக் கொண்டிருந்த போது,ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவருக்கு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக அவர் எவ்வித முன்னேற்றமும் இன்றி, 100% நினைவற்ற நிலையில் படுக்கையிலேயே இருந்து வருகிறார். அவரால் சுயமாக உணவு உட்கொள்ளவோ, பேசவோ அல்லது எவ்வித உடல் அசைவுகளையும் வெளிப்படுத்தவோ முடியாது. இதனால் ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய வேண்டி பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து ஹரிஷ் ராணாவுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் கருவிகள் மார்ச் 14ஆம் தேதி அகற்றப்பட்டது. இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு காற்றில் கரைந்தார் ஹரிஷ் ராணா. 13 வருட போராட்ட வாழ்வில் இருந்து விடைபெற்ற ஹரிஷ் ராணாவிற்கு அவரது பெற்றோர் பிரியா விடை கொடுத்த சம்பவம் இணையவாசிகளை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா, இன்று மாலை 4:10 மணிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

