குஜராத் விமான விபத்து: உதவிக்கரம் நீட்டிய இந்திய மருத்துவர்..!!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க இந்திய மருத்துவர் முன்வந்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. விமானம் புறப்பட்டு சரியாக 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் விமானத்தில் பயனித்த இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
மேலும் இடைக்கால நிவாரணமாக மேலும் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் டாடா குழுமம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரண நிதியாக வழங்கவுள்ளதாக ஐக்கிய அரபு அமீகரத்தில் வாழும் இந்திய மருத்துவர் ஷம்ஷீர் வயலில் உறுதிமொழி அளித்துள்ளார். அதன்படி உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 20 லட்சமும் வழங்கவுள்ளார். `


