விநாயகர் ஊர்வலத்தால் நேர்ந்த சோகம்- வகுப்பறையில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு

 
விநாயகர் ஊர்வலத்தால் நேர்ந்த சோகம்- வகுப்பறையில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூரில் உள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில்,  இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூரில் உள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில்,  இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளிக்கு அருகே சென்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் இருந்து ஒலித்த உரத்த டிஜே இசையே அவரது இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் என என்று பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை இல்லாமல் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

உயிரிழந்தவர் சோனு திவாரியின் மகள் வைஷ்ணவி திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சித்தார்த்நகரில் உள்ள குல்ஹரியா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பலராம்பூரில் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  வைஷ்ணவிஅந்தத் தம்பதியரின் ஒரே மகள் ஆவார். பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளின்படி, காலை சுமார் 10:58 மணியளவில் வைஷ்ணவி வகுப்பறையில் சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்தார். டிஜே இசையுடன் கூடிய விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் பள்ளியைக் கடந்து சென்றபோது, ​​அவர் மற்ற மாணவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. வைஷ்ணவி தனது இருக்கையிலிருந்து எழுந்து பின்னர் மீண்டும் அமர்ந்தார். பின்னர் மேஜையிலிருந்து சரிந்து கீழே விழும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆசிரியர்கள் வைஷ்ணவியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வகுப்பறையிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் மரணத்திற்கும் டி.ஜே. ஒலிக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மூலம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக நகர காவல் ஆய்வாளர் அபிஷேக் சிங் தெரிவித்தார். காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.