கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போருக்கு, ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மோடி அரசின் ராஜ வரவேற்பு.. காங்கிரஸ்

 
பணம்

இப்போது ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும் அல்லது ஆதாரமும் தேவையில்லை. எனவே கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போருக்கு, ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மோடி அரசால் ராஜ வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து சில்லரை மாற்றி கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறும் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியதாவது: ஆறரை ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அமைப்பு சார துறை மீண்டும்  அழுத்ததிற்கு உள்ளாகும். திடீர் அறிவிப்புக்கு பிறகு 6 கோடி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் 11 கோடி விவசாயிகள் சில  ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். 

கவுரவ் வல்லப்

2023 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான மொத்தம் 181 கோடி  ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரூ.3.62 லட்சம் கோடியில் பெரும்பகுதி கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களிடம் உள்ளது. இப்போது ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும் அல்லது ஆதாரமும் தேவையில்லை. எனவே கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போருக்கு, ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மோடி அரசால் ராஜ வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நோட்டு தடையால் சிறு தொழில்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தொற்றுநோய்க்கு பிறகு சிறிய மீட்சிக்கான அறிகுறிகளை காட்ட தொடங்கிய பொருளாதாரத்தை இந்த முடிவு பாதிக்கும். ரூ.2,000 நோட்டுகளை அறிமுகம் செய்ய முதலில் பரிந்துரைத்தவர்கள் யார், எதற்காக இந்த நோட்கள் கொண்டு வரப்பட்டது என்று பணமதிப்பிழப்பின் 8வது ஆண்டு விழாவில் நாங்கள் அரசிடம் கேட்க விரும்புகிறோம். 

பா.ஜ.க.

ரூ.2,000 நோட்டுகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன, கருப்புப் பணம் அனைத்தும் ஒழியும் என்று யார் சொன்னார்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது?. சுதந்திர இந்தியாவில் நடந்த இந்த மிகப்பெரிய கொள்ளை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இது போன்ற மினி பணமதிப்பு நீக்கம் காரணமாக நாணயத்தின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடையும். நீண்டகாலத்தில் இது நமது நாணயத்தின் நம்பகத்தன்மையையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் பாதிக்கிறது. அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் வருமான இழப்பு மூலம் சாதாரண குடிமக்கள் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள்  அன்றாட ஊழலால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.