சுப காலங்களில் கெட்ட சகுனமாக ராகுல் காந்தி வருவார்... கவுரவ் பாட்டியா

 
ராகுல் காந்தி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்கக் கூடாது என்ற ராகுல் காந்தியை,  சுப காரியங்களில் கெட்ட சகுனமாக ராகுல் காந்தி வருவார் என்று பா.ஜ.க.வின் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல என்று தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்று ராகுல் காந்தியை பா.ஜ.க. கடுமையா விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: இது ஏன் நடக்கிறது?. நாடு முன்னேறும் போது, சுப காலங்களில் கெட்ட சகுனமாக அவர் (ராகுல் காந்தி) வருவார்.  புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயகத்தின் கோயிலாக மாறும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை அவரால் வரவேற்க முடியாது என்ற சிறிய சிந்தனை அவருக்கு உள்ளது. நாட்டில வரலாறு சிறப்புமிக்க தருணம் ஏற்படும் போதெல்லாம் ராகுல் காந்தி மார்பில் அடிக்க தொடங்குவார். 

கவுரவ் பாட்டியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் கூட நமக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை என்று கூறியிருந்தார். காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும்  இதை பற்றி கூறினார். அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) அதை (புதிய நாடாளுமன்றம்) பற்றி கனவு கண்டார்கள், பின்னால் அவர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள். அவர்களால் களத்தில் எதையும் முடிக்க முடியாது. அவர்கள் (காங்கிரஸ்) பயனற்றவர்கள்.  நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி அவர்களின் கனவுகளை நனவாக்கும் போது கூட அவர்கள் மார்பில் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.