காஷ்மீரில் ஜி20 மாநாடு: சீனா கண்டனம்.. பங்கேற்க போவதில்லை என அறிவிப்பு..

 
காஷ்மீர்

 'பிரச்சினைக்குரிய பகுதி'யான காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.  

நடப்பு ஆண்டு(2023) ஜி20 கூட்டமைப்பின் மாநாட்டை  இந்தியா தலைமை வகித்து நடத்த உள்ளது.  இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.   இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்   ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்தவும்  மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.  அதன்படி ஏற்கனவே வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை மட்டத்திலான மாநாடு  டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.  இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

 ஜி20 மாநாடு கருத்தரங்கு

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலான மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  ஸ்ரீநகரில் நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாட்கள் (22ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.  ஆனால் ஜி20  உறுப்பு நாடான சீனா,   பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாகக் கூறி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று  அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்,  “எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் ஜி20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது” என்று தெரிவித்தார்.  இந்நிலையில் சீனாவை அறிவிப்பை தொடர்ந்து துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும்  இந்த  ஜி20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.