பாலியல் வழக்கில் தீர்ப்பை கேட்டதும் கதறி அழுத முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கினார். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அத்துடன் சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை குறித்த விவரங்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்டதும் கதறி அழுதபடியே பிரஜ்வேல், நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


