ரூ.2000 விவகாரம்...முட்டாள்தனமான முடிவை திரும்ப பெற்றதில் மகிழ்ச்சி - ப.சிதம்பரம்

 
chidambaram

ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக் கொள்ள எந்த ஆவணமும் தேவையில்லை என சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த அறிவிப்பை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சாமானிய மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லவே இல்லை. 2016-ல் அவை அறிமுகப்படுத்தப்பட்ட சில காலத்திலேயே சாமானிய மக்கள் அதனை புறக்கணித்துவிட்டனர். ஏனென்றால் அன்றாட சில்லறை புழக்கத்துக்கு ரூ.2000 நோட்டுகள் பயனற்றதாகவே இருந்தது.  இப்போது ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக் கொள்ள எந்த ஆவணமும் தேவையில்லை என சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர்.  2016-ல் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதே முட்டாள்தனமான முடிவு. 7 ஆண்டுகளுக்குப் பின்னராவது அந்த முட்டாள்தனமான முடிவை திரும்ப்பப் பெற்றுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே. இவ்வாறு தெரிவித்துள்ளார்.