முதலில் வெற்றி.. பின்னர் 16 வாக்கு வித்தியாசத்தில் ஜெயநகரை வென்ற பாஜக! கதறி அழுத காங்கிரஸ் வேட்பாளர்..

 
முதலில் வெற்றி.. பின்னர் 16 வாக்கு வித்தியாசத்தில் ஜெயநகரை வென்ற பாஜக!  கதறி அழுத காங்கிரஸ் வேட்பாளர்..

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக  அறிவிக்கப்பட்ட  ஜெயநகரை, 16 வாக்கு வித்தியாசத்தில்   பாஜக வென்றுள்ளது.  

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு  கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,  ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி நேற்று ( மே 13) எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  ஆளும் பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை சந்தித்தது.  ஜனதா  தளம் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  

congress

இந்நிலையில், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்ற ருசிகர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.  ஜெயாநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராமமூர்த்தியும், காங்கிரஸ் சார்ப்பில் சௌமியாவும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி , காங்கிரஸ் வேட்பாளர் சௌமியாவை விட  16 வாக்குகள் கூடுதலாக பெற்று, 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1 ஆயிரத்து 226 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.  

முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் சௌமியா வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழிழ்நுட்பக் கோளாறு காரணமாக நிராகரிக்கப்பட்ட 177 வாக்குகளை எண்ண வேண்டும் என பாஜக வலியுறுத்தியதால், பின்னர் அந்த வாக்குகளும் எண்ணப்பட்டன. அதில் பாஜகவுக்கு அதிக இடம் கிடைக்கவே, சௌமியாவை விட 16 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதனால் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  முதலில் வெற்றி என மகிழ்ச்சியில் இருந்த சௌமியா பின்னர்  தோல்வி என அறிவிக்கப்பட்டதால், சௌமியா  வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கண்ணீருடன் அழுதுகொண்டே வெளியேறினார்.