டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

 
fire

டெல்லியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 பேர் உடல்  கருகி பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. அத்துடன் 40ற்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரை காணவில்லை. இதனால் இந்த தீ விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிக வளாக தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் தீவிபத்து ஏற்பட்ட வணிக வளாகத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். 

fire

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சு புகை வெளியேறியது. நரேலா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிரானுலேஷன் தொழிற்சாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.