நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
May 30, 2025, 10:09 IST1748579981625
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி. அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தலாம். மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


