கிசான் கிரெடிட் கார்டு கடன் உதவி ரூ.5 லட்சமாக உயர்வு!

கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக ஒன்றிய பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெற உள்ளனர். பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கான புதிய திட்டம் கொண்டுவரப்படும். துவரம், உளுத்தம் பருப்பு, சிறுதானிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும். அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். 7.7 கோடி விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் பயன்பெற உள்ளனர் என கூறினார்.