சொகுசு காரில் மதுபோதையில் அதிவேகம்... பறிபோன 3 உயிரிகள்.. “அப்பா பார்த்துப்பார்” என அலட்சியம்
கேரள மாநிலம் கொச்சியில் சுமார் 125 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், ஸ்கூட்டியில் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த கொடூரம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியின் நெடும்பாசேரி விமான நிலையம் அருகே, அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மதுபோதையில் காரை ஓட்டிய சுஹைல் சஞ்சீவ் (19) கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் பரிசாக பெற்றோர் வழங்கிய மினி கூப்பரை தாறுமாறாக ஓட்டி 3 பேர் இறந்த பிறகும், “இது ஏர்போர்ட் ரோடு.. வேகமாக ஓட்டுவதில் என்ன தவறு? சாலைகள் எதற்காக இருக்கின்றன? வாகனம் ஓட்டுவதற்காகத்தானே? இந்த விவகாரத்தை என் அப்பா பார்த்துக்கொள்வார்” என திமிராக பேசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1:45 மணியளவில், கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி, சுஹைல் சஞ்சீவ் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் அதிவேக மினி கூப்பர் கார், மூன்று இளைஞர்கள் பயணித்த ஸ்கூட்டரை பின்னால் இருந்து மோதியது. இதில் ஸ்கூட்டரில் பயணித்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அந்த கார் ஸ்கூட்டரை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று நின்றதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 என்பதால், 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்குவது சட்டவிரோதமாகும். இந்த சூழலில் சஞ்சீவ் மது அருந்திவிட்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் பலியானவர்கள் வயநாடு மடக்கிமலையைச் சேர்ந்த 21 வயதான தேவிகா, பாலக்காட்டை சேர்ந்தவர் கோபிகா, (22)மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இஜாஸ்(21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மூவரும், தேநீர் அருந்துவதற்காக விமான நிலையப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கோபிகாவும் தேவிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இஜாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

