வேறு ஜாதி இளைஞனை காதலித்த மகளை தண்ணீரில் தள்ளி ஆணவ கொலை செய்த கொடூர தந்தை

 
father

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் குடிதினி என்ற கிராமத்தை சேர்ந்த ஓம்காரப்பா, தனது 15 வயது பெண் குழந்தையை வேறு ஜாதியை சேர்ந்த இளைஞனை காதலித்த காரணமாக ஆணவ கொலை செய்துள்ளார்.

ஓம்காரப்பாவின் மகள் ககன ஸ்ரீ (வயது 15) கடந்த ஒரு வருடமாக வேறு ஒரு ஜாதியை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் ககன ஸ்ரீ பிடிவாதமாக தனது காதலை தொடர்ந்துள்ளார். தனது மகளின் காதலால் ஆத்திரம் அடைந்திருந்த ஓம்காரப்பா கடந்த 31ஆம் தேதி மகளுக்கு நகை வாங்கிக் கொடுப்பதாக கூறி அருகில் உள்ள நகரில் உள்ள நகை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சில நகைகளை பார்த்த பிறகு தனது மகளை தியேட்டருக்கு அழைத்து சென்று திரைப்படம் பார்த்து உள்ளார். பின்பு கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலில் இருந்து நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் துங்கபத்ரா நதி கால்வாய் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கால்வாய் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிரு நான் இயற்கை உபாதைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

சிறிது நேரத்திற்கு பிறகு கால்வாயில் கரையில் உட்கார்ந்திருந்த மகள் பின்புறம் வந்த தந்தை அவளை கால்வாய்க்குள் தள்ளிவிட்டுள்ளார். கால்வாய்க்குள் விழுந்த பெண் தன்னை காப்பாற்றும்படி தந்தையிடம் கதறிய போதும் அதைக் கண்டு கொள்ளாமல் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓம்காரப்பா பெல்லாரி நகருக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக திருப்பதி சென்றுள்ளார். இரவு கடந்தும் தனது கணவரும் மகளும் வீடு திரும்பாத காரணத்தினால் பதட்டம் அடைந்த ஓம்காரப்பாவின் மனைவி காவல் நிலையத்தில் இருவரும் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய போது மகளை தந்தை தனது நண்பனின் உதவியோடு ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் திருப்பதி சென்ற பிறகு ஓம்காரப்பா தனது செல்போனை அணைத்து விட்டு கொப்பல் நகரில் தலைமறைவாக இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கொப்பல் நகரில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஓம்காரப்பாவை காவல்துறையினர் நேற்று கைது செய்து பெல்லாரி அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது தான் தனது மகளை ஆணவக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதை எடுத்து ஓம்காரப்பா மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.