நடுரோட்டில் மருமகள் தலையில் செங்கல்லால் அடித்த மாமனார்

 
se

வேலைக்குப் போகக்கூடாது என்று சொன்னதை கேட்காமல் வேலைக்குச் சென்றதால் மருமகளை நடுரோட்டில் செங்கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்த மாமனாரின் கொடூர வீடியோ வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 டெல்லியில் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜல்.  இவரது கணவர் பிரவீன் குமார்.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.  இத்தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது .

27 வயதான காஜல் பிஎஸ்சி படித்து முடித்து இருப்பதால் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்திருக்கிறார்.  இந்த நிலையில் கணவர் பிரவீன் குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதால் அவரது சம்பளத்தை மட்டுமே வைத்து குடும்பத்தை நடத்த முடியாத சூழல் இருந்திருக்கிறது.

sen

 இதனால் தான் வேலைக்கு செல்ல முடிவு எடுத்து இருக்கிறார்  காஜல்.  ஒரு பெண் சம்பாதித்து அதில் நாங்கள் வாழ்வதா என்று மாமனார் ஆத்திரப்பட்டு வேலைக்குச் செல்லக்கூடாது என்று தடுத்திருக்கிறார்.  வேலைக்கு சென்றால்தான் குடும்ப நிலைமையை சரி செய்ய முடியும் என்று காஜல் சொன்னதை அந்த குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவே இல்லை . ஆனால் அவர்களின் தடையை மீறி காஜல் வேலைக்கு சென்று இருக்கிறார்.

 கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் வேலைக்கு புறப்பட்டுச் சென்று இருக்கிறார்.  அப்போது மாமனாரும் கணவரும் அவரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களை மீறி  காஜல் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.  மாமனார் அவரை பின்தொடர்ந்து சென்று அந்த பெண்ணை வீட்டுக்கு வந்து விடச் சொல்லி கூப்பிட்டு இருக்கிறார்.  ஆனால் மருமகள் காஜல் விடாப்படியாக வேலைக்கு செல்வேன் என்று செல்ல,  மாமனாருக்கு கடும் கோபம் வந்திருக்கிறது.

 உடனே அங்கிருந்து செங்கல்லை எடுத்து வந்து மருமகளின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இந்த தாக்குதலில் காஜல் நிலைகுலைந்து ரத்தம் வழிந்து கீழே சரிந்து மயங்கி கிடந்திருக்கிறார் .அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளனர்.  மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் . 

தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று காஜலிடம் வாக்குமூலம் பெற்று மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.  மேலும் மாமனார் மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.  இந்த  சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் இதைப் பார்த்துவிட்டு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.