24 கோடி முஸ்லிம்களை என்ன செய்வார்கள்?, கடலில் வீசுவார்களா அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா?.. பா.ஜ.க. அரசை சாடிய பரூக் அப்துல்லா

 
இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா

24 கோடி முஸ்லிம்களை என்ன செய்வார்கள்?, கடலில் வீசுவார்களா அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை பரூக் அப்துல்லா தாக்கினார்.

ஜம்மு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீருக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது மற்றும், அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்பாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி

பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தபிறகு, பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த வேண்டாம்.  22 முதல் 24 கோடி முஸ்லிம்களை என்ன செய்வார்கள்?. கடலில் வீசுவார்களா அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று  மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை மறைமுகமாக தாக்கினார். மேலும் அவர் கூறியதாவது: சமூகங்கள் ஒருவருக்கொருவர் எதிராக களமிறங்கக்கூடாது. பயம் மற்றும் வெறுப்பு அரசியல்  புதிதல்ல. காந்தி ஜி ராமராஜ்யம் பற்றி பேசினார். ராம ராஜ்ஜியம் என்பதன் மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அனுபவிக்கும் மற்றும் யாருக்கும் பாகுபாடு காட்டாத பொதுநல அரசு என்று அவர் அர்த்தப்படுத்தினார். 

இந்திய தேர்தல் ஆணையம்

காந்தி ஜியின் கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீரை முழு அளவிலான மாநிலத்திலிருந்து யூனியின் பிரதேசமாக மாற்றுவது தேசத்தின் சோகம். முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும், மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு அவர்களின் உதவியை கோருவதற்கும் தேர்தல் ஆணையத்தை சந்திக்க நாங்கள் டெல்லிக்கு செல்வோம். தேசிய எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதன்பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.