செங்கோட்டையில் விவசாயிகள்… முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

 

செங்கோட்டையில் விவசாயிகள்… முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம், குடியரசு தினமான இன்று மாபெரும் டிராக்டர் பேரணியாக உருவெடுத்திருக்கிறது.

நேற்று வரை டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டிந்த விவசாயிகள், இன்று டெல்லி மாநகருக்குள் நுழைந்துவிட்டனர். செங்கோட்டையில் ஏறி கொடியும் நாட்டிவிட்டனர்.

செங்கோட்டையில் விவசாயிகள்… முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

டெல்லி போலீஸின் உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி செங்கோட்டைக்குள் நுழைந்துவிட்டனர். குடியரசு தின விழா நடந்துமுடிந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே டிராக்டருடன் விவசாயிகள் உள்ளே வந்தனர். இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் மிக முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று. செங்கோட்டையை அதிர செய்தால் மத்திய அரசை ஆட்டம் காண வைக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

இது ஒருபுறம் இருந்தாலும் செங்கோட்டையின் 10 கிமீ சுற்றளவில் தான் முக்கிய அரசியல் புள்ளிகளின் இல்லங்கள் அமைந்துள்ளன. பிரதமரின் இல்லம், குடியரசு மற்றும் குடியரசு துணை தலைவரின் இல்லங்கள், முக்கிய அமைச்சர்களின் இல்லங்கள், நாடாளுமன்றம் என அனைத்தும் இப்பகுதிகளில் தான் இருக்கின்றன.

எப்போதும் இந்தப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டிருக்கும். எந்நேரமும் பாதுகாப்புப் படையினர் கையில் துப்பாக்கியுடன் உலாவிக் கொண்டிருப்பார்கள். அப்பேர்பட்ட பகுதிகளுக்குள் தான் தற்போது விவசாயிகள் நுழைந்திருக்கின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது.

செங்கோட்டையில் இருக்கும் விவசாயிகள் பிரதமர் இல்லத்திற்கோ, குடியரசு தலைவர் இல்லத்திற்கோ செல்ல நிறைய நேரமெல்லாம் ஆகாது. எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றலாம். இரண்டு மாதங்களாகப் போராடி 11 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் தான் இன்று செங்கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

செங்கோட்டையில் விவசாயிகள்… முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

அப்படியிருக்கையில், உச்சபட்ச விரக்தியில் பிரதமர் இல்லத்திற்கு சென்று முற்றுகையிட சிறிது நேரம் கூட பிடிக்காது. ஆகவே அப்பகுதியில் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் டெல்லியின் முக்கிய சாலைகள் மூடப்படுவதாக டெல்லி டிராபிக் போலீஸ் அறிவித்துள்ளது.

எந்நேரமும் விவசாயிகள் அப்பகுதிகளுக்கு முன்னேறி செல்லலாம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க இணைய வசதிகளையும் நிறுத்திவைத்துள்ளதாகக் கூறியிருக்கிறது. அதேபோல மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ நிலையத்தையும் மூடிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய வசதி துண்டிக்கப்படுவது, பாதுகாப்பு பலப்படுத்துவது ஆகியவற்றை வைத்து பார்க்கையில் சிஏஏக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்கியது போல் விவசாயிகளின் போராட்டதையும் டெல்லி போலீஸ் ஒடுக்க நினைப்பது புலப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாததால் டெல்லியில் பதற்ற நிலை நீடிக்கிறது.

டெல்லி போலீஸ் வேண்டுமென்றே பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சதித் திட்டம் தீட்டியதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.