திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி தரிசன டிக்கெட் மோசடி : 3 பேர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றி போலி டிக்கெட்டுகளை அவர்களிடம் கொடுத்து அதிக பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை அடையாளம் கண்டுபிடித்த தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கொண்ட மோசடி கும்பலில் மூன்று பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதியை சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிரகாஷ் ஆகியோர் பக்தர்கள் கொண்டு செல்லும் ₹ 300 தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மிபதியுடன் கூட்டணி அமைத்து பக்தர்களை ஏமாற்றி வந்தனர். போட்டோஷாப் மூலம் ₹ 300 டிக்கெட்டுகளை போலியாக தயார் செய்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிரகாஷ் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசன டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பக்தர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மெதுவாக பேசி அதிக பணம் கொடுத்தால் உடனடியாக டிக்கெட் கிடைக்கும். இப்போதே நீங்கள் தரிசனத்திற்கு செல்லலாம் என்று கூறினர். அவ்வாறு பணம் பெற்ற பக்தர்களிடம் அவர்களுடைய பெயர், விவரங்களை கேட்டு போட்டோஷாப் மூலம் போலியாக தரிசன டிக்கெட்களை தயார் செய்து அந்த டிக்கெட்டுகளில் அவர்களுடைய பெயர்களை இடம் பெற செய்தனர்.
பின்னர் ₹ 300 தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியர் லட்சுமிபதிக்கு தகவல் அளித்து அவருடைய உதவியுடன் அந்த பக்தர்களை சாமியை வழிபாடு செய்ய கோயிலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த 14ஆம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் ₹ 300 தரிசன டிக்கெட்களுடன் சாமி கும்பிட சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகத்தை கண்டுபிடித்த தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் அந்த பக்தர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருப்பது போலி டிக்கெட்டுகள் என்பதும் அந்த டிக்கெட்டுகளை மணிகண்டா, ஜெகதீஷ், சசி,பானு பிரகாஷ் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் ஊழியர் லட்சுமிபதி டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யாமல் அந்த பக்தர்களை கோயிலுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இது பற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் திருமலை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த டிக்கெட்டுகளை அதிக விலைக்கு பக்தர்களிடம் விற்பனை செய்த கும்பலில் ஸ்கேனிங் செய்யும் ஊழியர் லட்சுமிபதி, மணிகண்டா, ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். முறை கேட்டில் ஈடுபட்டு தப்பி ஓடி தலைவர் மறைவாக இருக்கும் சசி, பானு பிரகாஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரும் 11 போலி டிக்கெட்டுகளை ₹ 19 ஆயிரத்திற்கு பக்தர்களிடம் விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.