இருமல் மருந்து ஏற்றுமதி.. அதிரடி கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு..

 
இருமல் மருந்து ஏற்றுமதி.. அதிரடி கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு.. 


இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், காம்பியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்திருக்கிறது. இதனை அடுத்து இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு

ஜூன் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் உள்ள மத்திய அரசு ஆய்வகங்களில் கட்டாயம் இருமல் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் , ஆய்வுக்கு பின்பு அளிக்கப்படும் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஏற்றுமதிக்கான ஒப்புதலை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வழங்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்புகளை நிறுவனங்கள் மத்திய அரசு ஆய்வகங்களில் உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.