குப்பையிலிருந்து வெடித்த மர்மபொருள்- தூய்மை பணியாளர் பலி

 
s s

தெலுங்கானாவில்  குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென்று வெடித்த மர்ம பொருளால் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஐதராபாத்தில் உள்ள குசாய்குடா பகுதியில் பல்வேறு சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு உள்ள குப்பை தொட்டி ஒன்றில் போடப்பட்டிருந்த குப்பைகளை எடுத்த தூய்மை பணியாளரான நாகராஜு இன்று காலை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது திடீரென்று குப்பை தொட்டியில் இருந்த மர்ம பொருள் வெடித்து 30 அடி உயரத்திற்கு பறந்தது. இந்த சம்பவத்தில் தூய்மை பணியாளர் நாகராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக குசாய்குடா போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் நாகராஜூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்திய வேதிப்பொருட்களை சிலர் அந்த குப்பைத் தொட்டியில் கொட்டி வந்த நிலையில் அந்த வேதிப்பொருட்களுக்கு இடையே வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.