திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்கவைக்கும் பா.ஜ.க... மேகாலயாவில் என்.பி.பி. கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு

 
பா.ஜ.க.

திரிபுராவில் பா.ஜ.கவும், நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மேகாலாயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா (பிப்.16), மேகாலயா மற்றும் நாகாலாந்து (பிப்.27) ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து  தேர்தல்களுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. 

காங்கிரஸ்

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி,  திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பா.ஜ.க. 36 முதல் 45 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும். இடதுசாரி 6 முதல் 11 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பா.ஜ.க.-என்.டி.பி.பி. கூட்டணி 38 முதல் 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். என்.பி.எப். 3 முதல் 8 இடங்களிலும், காங்கிரஸ் 1 முதல் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கான்ராட் சங்மா

மேகாலாயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான என்.பி.பி. கட்சி 18 முதல் 24 இடங்களில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளை வென்ற பெரிய கட்சியாக இருக்கும். காங்கிரஸ் 6 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 4  முதல் 8 இடங்களை கைப்பற்றலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேகாலயாவில் கான்ராட் சங்மாவின் என்.பி.பி. கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு தோராயமானது என்பதால் அது தவறாக அமையலாம்.