டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகளிடம் 9 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

 
கவிதா

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரத்துக்கு  மேல் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக  வரும் 16ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகும்படி கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு மார்ச் 10ம் தேதி ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வரின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை முதலில் சம்மன் அனுப்பியது. ஆனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தக்கோரி அன்றைய தினம் டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரத  போராட்டத்தை நடத்துவதால் விசாரணையை ஒத்தி வைக்கும்படி அமலாக்கத்துறையிடம் கவிதா கோரிக்கை விடுத்தார்.

கே.சந்திரசேகர் ராவ்

அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை மார்ச் 11ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி புதிய சம்மன் அனுப்பியது. அதன்படி, கே.கவிதா நேற்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் கே.கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 9 மணி நேரத்துக்கு மேல் கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து கே.கவிதா கிளம்பினார்.

அமலாக்கத்துறை

விசாரணையின்போது, கே.கவிதாவிடம் அவரது வீட்டில் உள்ள செல்போனை கேட்டுள்ளனர். இதனையடுத்து கவிதாவின் பாதுகாவலர் வீட்டுக்கு சென்று அந்த செல்போனை எடுத்து வந்து அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தார்.மேலும், தனது  நெருங்கிய கூட்டாளியும், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியுமான அருண் பிள்ளையை கே.கவிதா எதிர்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 16ம் தேதி  மீண்டும் விசாரணைக்கு வரும்படி கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது.