ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையின் கஸ்டடியிலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மிதிலேஷ் தாக்குர் உறுதிப்படுத்தியுள்ளார். ஜார்கண்ட் சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருப்பவர் சம்பாய் சோரன். ஜார்கண்டின் செரகில்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 7 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இது தொடர்பாக பேசிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சின் எம்.பி. மஹுவா மாஜி, “முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ளார். அமலாக்கத் துறையுடன் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். சாம்பை சோரன் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்றார்.