சோனியா காந்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட டி.கே.சிவகுமார் - நடந்தது என்ன?

 
Sondia and sivakumar Sondia and sivakumar

சோனியா காந்தியின் அறிவுரையின் படியே டி.கே.சிவகுமார் பிடிவாததை விட்டு துணை முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா,  அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக டெல்லியில் மூத்த அரசியல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தபோதிலும், டி.கே.சிவகுமார் உடன்படவில்லை. 

இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.