காவிரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க டி.கே.சிவகுமார் நாளை டெல்லி பயணம்

 
DK Sivakumar

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்த மாநில துணை முதல்வரும் நீர்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நாளை டெல்லி செல்கிறார். 

காவிரி ஆறு

காவிரியில் இருந்து நடுவர்மன்ற உத்தரவின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறக்காமல் இருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழ்நாட்டிற்கு வரும் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு வரை ஏ ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 4300 கனவாக இருந்த நிலையில் இன்று காலை இரு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவை 6,300 கன அடியாக நீர்வளத் துறை அதிகாரிகள் அதிகரித்தனர். 

மாநிலத்தில் உள்ள அணைகளின் போதிய தண்ணீர் இல்லாமல் இருப்பதால் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது கடினம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.  அதே சமயத்தில் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் துணை முதல்வரும் நீர்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் இருந்து 24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். ஆனால் நமது மாநிலம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என்று வாதிட்டனர். ஆனால் மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. 

ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.. மே.13ம் தேதியுடன் பாஜகவுக்கு இறுதிச்சடங்கு.. - டி.கே.சிவக்குமார் பரபரப்பு..

இதனிடையில் காவிரியில் இருந்து 23 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடகோரி தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டொரு நாளில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யபோவதாக அம்மாநில நீர்பாசன துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடக செய்தி மூலமாக தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின் போது, நமது மாநிலத்தின் சார்பில் என்னென்ன முக்கிய ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி வாதிட வேண்டும் என்பது குறித்து வக்கீல்களுடன் ஆலோசிப்பதற்காக நாளை டெல்லி செல்கிறேன் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.